வாடகை வாகனங்களை விற்று மோசடி; ஓட்டல் உரிமையாளர் கைது


வாடகை வாகனங்களை விற்று மோசடி; ஓட்டல் உரிமையாளர் கைது
x
தினத்தந்தி 20 July 2023 11:02 PM IST (Updated: 21 July 2023 3:12 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வாடகை ஒப்பந்தத்தின் பேரில் வாகனங்களை விற்று மோசடி செய்த ஓட்டல் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்தவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர்

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வாடகை ஒப்பந்தம்

திருவண்ணாமலை மாவட்டம் பொரசப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவர் தனக்கு சொந்தமான வாகனத்தை திருப்பூர் போயம்பாளையம் கங்காநகர் பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 34) என்பவரிடம் வாடகை ஒப்பந்தத்தின் பேரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28-ந்தேதி கொடுத்துள்ளார். மேலும் மாதந்தோறும் மோகன்ராஜ் ரூ.18 ஆயிரம் வாடகை கொடுக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒப்பந்தத்தின்படி வாடகையை மோகன்ராஜ் கொடுக்காமல் இருந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த பிரவீன்குமார் தன்னுடைய வாகனத்தை காண்பிக்கும்படி மோகன்ராஜிடம் கேட்டுள்ளார். ஆனால் வாகனத்தை காட்டாமல் மோகன்ராஜ் தாமதம் செய்து வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த பிரவீன்குமார் அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

ஓட்டல் உரிமையாளர் கைது

விசாரணையில் பிரவீன்குமாரிடம் வாங்கிய வாகனத்தை மோகன்ராஜ் அவினாசியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மூலமாக கோவையில் விற்று விட்டது தெரிய வந்தது. மேலும் மோகன்ராஜ் திருவண்ணாமலையை சேர்ந்த 5 பேரிடம் 5 வாகனங்கள் மற்றும் திருப்பூரில் ஒரு மொபட் ஆகியவற்றை வாடகை ஒப்பந்தத்தின் பேரில் வாங்கி வாகன உரிமையாளர்களின் உரிய அனுமதி இல்லாமலேயே அந்த வாகனங்களை விற்று மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து போலீசார் நேற்று மோகன்ராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள ராஜேந்திரனை போலீசார் தேடி வருகின்றனர். கைதான மோகன்ராஜ் போயம்பாளையம் பகுதியில் ஓட்டல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது. திருப்பூர் மற்றும் திருவண்ணாமலையில் வாடகை ஒப்பந்தத்தின் பேரில் வாகனங்களை வாங்கி விற்று மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story