குருபரப்பள்ளி அருகேவீட்டில் பதுக்கி வைத்திருந்த உடும்பு, கீரி, மான் கொம்பு பறிமுதல்தொழிலாளி கைது
குருபரப்பள்ளி:
குருபரப்பள்ளி அருகே வனப்பகுதியில் வேட்டையாடிய உடும்பு, கீரி, மான் கொம்புகளை வீட்டில் பதுக்கி வைத்திருந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
ரோந்து பணி
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி அருகே உள்ள சிக்கிமேடு கிராம பகுதியில் ஓசூர் வனக்கோட்ட உதவி வன பாதுகாவலர் ராஜமாரியப்பன், வன பாதுகாப்பு படை உதவி வனப்பாதுகாவலர் முனியப்பன், கிருஷ்ணகிரி வனச்சரக அலுவலர்கள் ரவி, மூர்த்தி ஆகியோர்அடங்கிய குழுவினர் மோப்ப நாய் உதவியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு வீட்டில் 2 உடும்புகள் இருந்தன. அதில் ஒன்று உயிரோடும், மற்றொன்று இறந்தும் இருந்தன. மேலும் அந்த வீட்டில் கீரி மற்றும் மான் கொம்புகள் இருந்ததையும் வனத்துறையினர் கண்டுபிடித்தனர். இதையடுத்து உடும்பு, கீரி, மான் கொம்புகளை வனத்துறையினர் பறிமுதல்செய்தனர்.
கைது
மேலும் இதுதொடர்பாக வனஉயிரின குற்ற வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அதே கிராமத்தை சேர்ந்த தொழிலாளியான அல்லிமுத்து (வயது 45) என்பவரை கைது செய்தனர். தலைமறைவான கார்த்திக் என்பவரை தேடி வருகின்றனர். இந்த சோதனையின்போது குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசாரும் உடன் இருந்தனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், வன விலங்குகள் வேட்டையாடப்படுவதை தடுக்கும் வகையில் சிக்காரிமேடு கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. வன உயிரினங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால் வனச்சட்டங்களின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றனர்.