ஆயில்பட்டி அருகேவாழைத்தார் திருடிய பட்டதாரி வாலிபர் கைது

நாமகிரிப்பேட்டை:
நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் மங்களபுரம், முள்ளுக்குறிச்சி பகுதிகளில் உள்ள தோட்டங்களில் வாழைத்தார்கள் வெட்டி திருடப்படுவதாக ஆயில்பட்டி போலீசாருக்கு புகார்கள் சென்றன.
இதை தொடர்ந்து ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் தலைமையில் வாழைத்தார் திருடும் கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் ஒருங்கிணைந்து அவரவர் தோட்டத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினர்.
இந்த நிலையில் ஆயில்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், சுப்பிரமணியம் மற்றும் போலீசார் வாழை தோட்டங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆயில்பட்டி அருகே உள்ள தோட்டத்தில் வாழைத்தார்களை வெட்டி கொண்டிருந்த ஒருவரை போலீசார் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரிடம் விசாரித்தபோது, பிடிபட்டவர் அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் பட்டதாரியான அஜித்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. படித்து வேலை கிடைக்காத விரக்தியில் அவர் வாழைத்தார் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.






