வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். சினிமா பாணியில் சம்பவம்`வாய்ஸ் டிரான்ஸ்மீட்டர்' மூலம் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய வாலிபர் கைது
ஓசூர்:
ஓசூரில் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். சினிமா பாணியில் `வாய்ஸ் டிரான்ஸ்மீட்டர்' மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதிய வாலிபர் மற்றும் உடந்தையாக இருந்த உறவினர் கைது செய்யப்பட்டனர்.
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தில் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு எழுத 4 ஆயிரத்து 591 தேர்வர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 ஆயிரத்து 559 பேர் கலந்து கொண்டு தேர்வு எழுதினர். காலை பொதுஅறிவு தேர்வும், மதியம் தமிழ் தேர்வும் நடைபெற்றது.
இந்த நிலையில் பொதுஅறிவு தாள் தேர்வை அனைவரும் மும்முரமாக எழுதி கொண்டிருந்தனர். அப்போது தேர்வு அறையில் திடீரென சத்தம் கேட்டது. உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தேர்வு எழுதியவர்களை சோதனை செய்தனர். அப்போது தேர்வு எழுதிய வாலிபர் ஒருவர் வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். சினிமா பாணியில் முககவசத்தில் `வாய்ஸ் டிரான்ஸ்மீட்டர்' என்னும் கருவியை பொருத்தி வெளியில் இருந்து தகவலை கேட்டு தேர்வெழுதியது கண்டுபிடிக்கப்பட்டது.
கைது
இதையடுத்து போலீசார் விசாரணையில் அவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே பச்சியூரை சேர்ந்த நவீன் (வயது 26) என்பது தெரியவந்தது. மேலும் அவருடைய உறவினர் ராஜவேல் என்பவர் வெளியில் இருந்து செல்போன் மூலம் நவீன் தேர்வு எழுத உதவியதும் தெரியவந்தது.
இதையடுத்து ஓசூர் அட்கோ போலீசார் இருவரையும் கைது செய்தனர். நவீன் தேர்வுக்காக ஆன்லைன் மூலம் சிறிய அளவிலான `வாய்ஸ் டிரான்ஸ்மீட்டரை' வாங்கி அதை கறுப்பு நிற முககவசத்தில் வைத்து தைத்து அதை அணிந்தவாறு தேர்வெழுத வந்துள்ளார். ஆனால் அந்த `வாய்ஸ்டிரான்ஸ் மீட்டரில்' எழுந்த சத்தம் அவரை காட்டி கொடுத்து விட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து மதியம் நடந்த தமிழ் தேர்வு எழுத வந்த அனைத்து தேர்வர்களும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.