கஞ்சா, குட்கா, லாட்டரி விற்ற 11 பேர் கைதுசூதாடிய 3 பேர் பிடிபட்டனர்
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கஞ்சா, குட்கா, லாட்டரி சீட்டு விற்ற 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சூதாடிய 3 பேர் பிடிபட்டனர்.
கஞ்சா
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எங்கும் கஞ்சா விற்பனை நடைபெறுகிறதா/ என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் கஞ்சா விற்றதாக ஓசூர் சிப்காட், மத்திகிரி, பாகலூர், சூளகிரி பகுதியை சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்றதாக வேப்பனப்பள்ளி, பேரிகை, போச்சம்பள்ளி, மத்தூர், ஊத்தங்கரையை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.500 பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை பொருட்கள்
மேலும் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றதாக ஓசூர், சூளகிரி பகுதியில் 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1,250 மதிப்புள்ள குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.பாகலூர் போலீசார் போயப்பன் குட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக பட்டுவாரப்பள்ளி நாராயணசாமி (35), முனியப்பா (40), நாராயணசாமி (40) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.350 பறிமுதல் செய்யப்பட்டது.