சேலத்தில்நகைக்கடை ஊழியரை கடத்திய பிரபல ரவுடி கைதுதலைமறைவாக உள்ள 5 பேருக்கு வலைவீச்சு
சேலம்
நகைக்கடை ஊழியர் கடத்தல் வழக்கில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைக்கடை ஊழியர்
சேலம் லைன்மேடு பகுதியை சேர்ந்தவர் கோபி. இவருடைய மகன் சந்திரசேகர் (வயது 33). இவர் சேலம் குகை பகுதியில் உள்ள ஒரு நகைக்கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 7-ந்தேதி இவர் குகை பகுதியில் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை கடத்தி பச்சப்பட்டியில் உள்ள ஒரு பாழடைந்த பங்களாவில் அடைத்து வைத்து ரூ.2 லட்சம் கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியது. அந்த கும்பலிடம் அவர் பணம் இல்லை என்று கூறி உள்ளார்.
உடனே நகைக்கடை உரிமையாளரிடம் பணம் வாங்கித்தரும்படி கூறிய அந்த கும்பல், கடை உரிமையாளரை சந்திரசேகர் மூலம் தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதுடன், பணம் தராவிட்டால் சந்திரசேகரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டல் விடுத்து பேசியது. அதற்கு நகைக்கடை உரிமையாளர் அந்த கும்பலை சோ்ந்தவர்களிடம் சந்திரசேகரை வீட்டிற்கு அழைத்து வாருங்கள். அங்கு வந்து பணம் கொடுக்கிறேன் என்று செல்போனில் கூறினார். பின்னர் இந்த கடத்தல் சம்பவம் குறித்து அவர் செவ்வாய்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
ரவுடி கைது
இதனிடையே செல்போனில் பேசியபடி அந்த கும்பல் சந்திசேகரை, நகைக்கடை உரிமையாளரின் வீட்டிற்கு அழைத்து வந்தது. அப்போது அங்கு போலீசார் நிற்பதை பார்த்ததும் சந்திரசேகரை விட்டு, விட்டு அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓட முயன்றனர்.
அப்போது குகை பகுதியை சேர்ந்த விமல்குமார் (22), நாராயணநகரை சேர்ந்த மாரியப்பன் (52) ஆகிய 2 பேரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் தப்பியோடியவர்களை தேடி வந்தனர்.
இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடியான கிச்சிப்பாளையத்தை சேர்ந்த பிரகாஷ் மகன் இளையராஜா (21) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி விக்னேஷ் உள்பட மேலும் 5 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.