முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக வழக்கு:இந்து முன்னணி கோட்ட தலைவர் கைது
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
சேலம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
விநாயகர் சிலை கரைப்பு
சேலம் அம்மாபேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (வயது 47). இவர் இந்து முன்னணியின் சேலம் கோட்ட தலைவராக உள்ளார். இவர் பட்டை கோவில் பகுதியில் உள்ள ஒரு கியாஸ் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் சம்பவத்தன்று கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பகுதியில் நடைபெற்ற விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தி.மு.க., மாவட்ட பிரதிநிதி சக்திவேல் தேன்கனிக்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
கைது
இந்த நிலையில் சந்தோஷ்குமார் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்வதற்காக சேலம் பட்டை கோவில் பகுதியில் உள்ள நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது தேன்கனிக்கோட்டை போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் அவரை தேன்கனிக்கோட்டை கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தி தர்மபுரி சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீசார் கூறும்போது, கடந்த 21-ந்தேதி தேன்கனிக்கோட்டையில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சந்தோஷ்குமார் பேசினார். அப்போது அவர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பேசினார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சந்தோஷ்குமாரை கைது செய்து உள்ளோம் என்று கூறினர்.