சேலத்தில்லாரியில் ரூ.7 லட்சம் எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருடிய வாலிபர் கைது2 பேருக்கு வலைவீச்சு
சூரமங்கலம்
சேலத்தில் லாரியில் வைத்திருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எலக்ட்ரிக்கல் பொருட்கள்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை சேர்ந்தவர் கண்ணன் (வயது 40). ஒப்பந்ததாரான இவர் சேலத்தில் ஒப்பந்தம் எடுத்து வேலை செய்து வருகிறார். இதற்காக அவர் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்தில் ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக்கல் பொருட்களை வாங்க ஆர்டர் செய்திருந்தார். இதையடுத்து எலக்ட்ரிக்கல் பொருட்கள் லாரி மூலம் கோவையில் இருந்து சேலம் திருவாக்கவுண்டனூர் வந்தது.
இதையடுத்து கண்ணன் பார்சலை எடுக்க சென்றார். அப்போது லாரியில் வந்த பெட்டி உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.7 லட்சம் மதிப்பிலான எலக்ட்ரிக்கல் பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து லாரியை ஓட்டி வந்த சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலம் நகரை சேர்ந்த கோபால் என்பவரிடம் விசாரித்தார்.
கைது
மேலும் இதுதொடர்பாக அவர் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சூரமங்கலம் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் இன்ஸ்பெக்டர் கந்தவேல் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.
இந்த நிலையில் போலீசார் விசாரணையில் ராசிபுரம், குமாரபாளையம் கோம்பை காடு பகுதியை சேர்ந்த விஜயகுமார் மகன் கவியரசன் (25), தேவராஜ், கவுதம் ஆகிய 3 பேர் லாரியில் இருந்த ரூ.7 லட்சம் எலக்ட்ரிக்கல் பொருட்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கவியரசனை கைது செய்ததோடு எலக்ட்ரிக்கல் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் திருட்டில் தொடர்புடைய தேவராஜ், கவுதம் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.