தங்கச்சங்கிலி பறித்த 2 பெண்கள் கைது
திருவிழா பார்க்க வந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை,
திருவிழா பார்க்க வந்த மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை திருடிய 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
திருவிழா
சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டையில் உள்ள கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடைபெற்றது. இதில் 8-ம் நாள் நிகழ்ச்சியாக இரவு வெள்ளி ரத திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை காண மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த சின்ன உலகாணி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் (வயது42) என்பவர் தன் தாயார் சரஸ்வதி அம்மாளுடன் வந்திருந்தார்.
வெள்ளி ரத நிகழ்ச்சி நடைபெறும்போது இருந்த கூட்டத்தை பயன்படுத்தி சிலர் சரஸ்வதி அம்மாள் அணிந்து இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். இதுகுறித்து ராஜேந்திரன் அங்கிருந்த புறக்காவல் நிலைய போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
கைது
இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வேலூர் மாவட்டம் ஊசூர் கிராமத்தை சேர்ந்த கவுதமி (31), பார்வதி (36) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடந்த விசாரணையில் அவர்கள் 2 பேரும் சேர்ந்து சரஸ்வதி அம்மாளின் தங்க சங்கிலியை பறித்து அதை வேறு ஒருவரிடம் கொடுத்தது தெரிந்தது. நகை வாங்கிய அந்த நபர் தப்பிச் சென்று விட்டார்.
இதை தொடர்ந்து சிவகங்கை தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து கவுதமி மற்றும் பார்வதியை கைது செய்தனர். நகையுடன் தப்பிச்சென்ற ஆசாமியை தேடி வருகின்றனர்.