சேலம் மணியனூர், தாதகாப்பட்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது
சேலம் மணியனூர், தாதகாப்பட்டியில் வழிப்பறியில் ஈடுபட்ட 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
அன்னதானப்பட்டி:
அன்னதானப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரகலா மற்றும் போலீசார் ரோந்து சென்ற போது, சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள், மேட்டூரை சேர்ந்த பிரபல ரவுடி சசி என்ற சசிகுமார்(வயது 40), ஒந்தாப்பிள்ளை காடு பகுதியை சேர்ந்த ரவுடி கார்த்திக்(25) என்பது தெரியவந்தது. இவர்களில் சசிகுமார், மணியனூர் பகுதியில் நடந்து சென்ற வியாபாரி ஒருவரிடம் 2 பவுன் நகை, ரூ.700 வழிப்பறி செய்ததும், கார்த்திக், தாதகாப்பட்டி கேட் அடுத்த மூணாங்கரடு செல்லக்குட்டிக்காடு பகுதியை சேர்ந்த கேசவன் (30) என்ற தனியார் நிறுவன ஊழியரிடம் கத்தியை காட்டி ரூ.2 ஆயிரம் வழிப்பறி செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஸ்கூட்டர், 2 பவுன் நகை, ரூ.2 ஆயிரத்து 400 ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் ரவுடி சசி மீது மேட்டூர், கருமலைக்கூடல், காரிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.