தாய், குழந்தை சாவு: பிரசவம் பார்த்த கணவர் கைது


தாய், குழந்தை சாவு: பிரசவம் பார்த்த கணவர் கைது
x

மல்லூர் அருகே தாய், குழந்தை இறந்த விவகாரத்தில், பெண்ணுக்கு பிரசவம் பார்த்த கணவர் கைது செய்யப்பட்டார்.

சேலம்

பனமரத்துப்பட்டி:

பெண் கர்ப்பம்

சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பூபதி. இவருடைய மனைவி பார்வதி (வயது 36). கணவன்-மனைவி 2 பேரும் கட்டிட வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு கஜேந்திரன் (3), பூமிகா (2) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே பார்வதி மீண்டும் கர்ப்பமானார்.

ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர். நேற்று முன்தினம் மதியம் அவர்கள் 2 பேரும் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு வந்தனர்.

மனைவி, குழந்தை பலி

அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது பெண் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அந்த பகுதியில் குழி தோண்டி குழந்தையின் உடலை புதைத்தனர். இதனிடையே சிறிது நேரத்தில் மயங்கிய பார்வதி, அங்கேயே பலியானார். மனைவி, குழந்தை இறந்ததால் பூபதி செய்வதறியாது திகைத்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து மல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் புதைக்கப்பட்ட குழந்தை மற்றும் பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

கைது

இதையடுத்து போலீசார் மனைவியை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் பொதுவெளியில் பிரசவம் பார்த்தது, பிரசவத்தின் போது இறந்த குழந்தையை போலீசுக்கு தெரிவிக்காமல் புதைத்தது போன்ற குற்றத்திற்காக பூபதியை கைது செய்தனர்.

தாய் இறந்த நிலையில், தந்தையை போலீஸ் கைது செய்துள்ளதால் பூபதியின் குழந்தைகளான கஜேந்திரன், பூமிகா ஆகியோர் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.


Next Story