அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது


அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது
x

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர்

அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினரை போலீசார் கைது செய்தனர்.

முற்றுகை போராட்டம்

விருதுநகர் அருகே பாலவநத்தம் கிராமத்தில் அரசு நிகழ்ச்சியில் மனு கொடுக்க வந்த பெண்ணை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தாக்கியதாகவும், இதை கண்டித்து அவரது வீட்டை முற்றுகையிடும் தொடர் போராட்டம் நடைபெறும் என்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்தார்.

இதற்கிடையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய பெண், அமைச்சரிடம் தனது தாயாருக்கு முதியோர் உதவி தொகை கேட்டு மனு கொடுக்க வந்ததாகவும், அமைச்சர் தனக்கு ஏற்கனவே அறிமுகமானவர் என்பதால் தன்னை தலையில் தட்டினார் என்றும், தன்னை தாக்கவில்லை என்றும் கூறினார். ஆனாலும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அந்த பெண்ணை மிரட்டி, இதுபோல் சொல்லி உள்ளதாக தெரிவித்தார்.

தடுத்து நிறுத்தம்

இந்நிலையில் மதியம் பா.ஜ.க.வினர் விருதுநகர் கச்சேரி வீட்டில் உள்ள பத்திர பதிவு அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்திற்காக திரண்டனர். கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தலைமையில் திரண்ட பா.ஜ.க.வினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். மேலும், பாண்டுரங்கன், மாநில செயற்குழு உறுப்பினர் கஜேந்திரன், மேலிட பார்வையாளர் வெற்றிவேல் உள்பட 158 பேரை போலீசார் கைது செய்தனர்.

16 பேர் கைது

அதே போல மாலை 4 மணிக்கு விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜ.க.வினர், சிவகாசியில் உள்ள திருத்தங்கல்-எஸ்.என்.புரம் ரோடு பகுதியில் பா.ஜ.க. அலுவலகத்தில் கூடினர். பின்னர் அவர்கள் அங்கிருந்து விருதுநகரில் உள்ள அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வீட்டை முற்றுகையிட செல்ல தயார் ஆனார்கள்.

இதுகுறித்து அறிந்த திருத்தங்கல் போலீசார் அங்கு சென்று அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். அதன்படி மேற்கு மாவட்ட தலைவர் சுரேஷ்குமார், சிவகாசி மாநகர தலைவர் பாட்டக்குளம் பழனிச்சாமி, ஒன்றிய தலைவர் சிவசெல்வராஜ், சரவணக்குமார், முருகேசன், மாவட்ட செயலாளர் கலையரசன், கிரி உள்பட 16 பேரை போலீசார் கைது செய்தனர்.

280 பேர் கைது

அருப்புக்கோட்டையில் கலைஞர் நகர், பெரியார் நகர், நெசவாளர் காலனி உள்ளிட்ட பகுதியில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட பா.ஜ.க. மகளிர் அணியினர் அமைச்சர் வீட்டை முற்றுகையிட சென்றனர். ஆனால் அவர்களை விருதுநகருக்கு செல்லக்கூடாது என போலீசார் தடுத்ததால் பா.ஜ.க. மகளிர் அணியினர் மறியலில் ஈடுபட முயற்சித்தனர். பின்னர் பஸ்சில் ஏறி விருதுநகர் செல்ல முயன்ற பா.ஜ.க.வினரை புதிய பஸ் நிலையத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து போலீசார் பா.ஜ.க.வினரை குண்டுகட்டாக வேனில் ஏற்றி கைது செய்தனர். விருதுநகர் மாவட்டத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட முயன்றதாக மொத்தம் 280 பேர் கைது செய்யப்பட்டனர்.


Next Story