மதுரையில் தொடர் கைவரிசை காட்டிய பிளஸ்-2 மாணவர்கள் 5 பேர் அதிரடி கைது


மதுரையில் தொடர் கைவரிசை காட்டிய  பிளஸ்-2 மாணவர்கள் 5 பேர் அதிரடி கைது
x

காலையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களாகவும், மாலையில் கொள்ளையர்களாகவும் மாறி மதுரையில் தொடர் கைவரிசை காட்டிய பிளஸ்-2 மாணவர்கள் 5 ேபர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்தவரும் சிக்கினார்.

மதுரை


காலையில் பள்ளிக்கூடம் செல்லும் மாணவர்களாகவும், மாலையில் கொள்ளையர்களாகவும் மாறி மதுரையில் தொடர் கைவரிசை காட்டிய பிளஸ்-2 மாணவர்கள் 5 ேபர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு உடந்தையாக இருந்தவரும் சிக்கினார்..

வாகன சோதனை

மதுரையில் கடந்த சில மாதங்களாக குற்றச்சம்பவங்களில் சிறுவர்கள் அதிகம் ஈடுபடுவதாகவும், அதில் பள்ளி மாணவர்கள் சம்பந்தப்பட்டு இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அவ்வாறு குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார்.

அதன்படி தெற்கு போலீஸ் துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் மேற்பார்வையில், எஸ்.எஸ்.காலனி குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சங்கீதா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் மதுரையில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். சம்பவத்தன்று இரவு காளவாசல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

6 பேர் கைது

அப்போது அந்த வழியாக 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 5 பேரை போலீசார் நிறுத்த முயன்றனர். ஆனால் அவர்கள் அங்கிருந்து வேகமாக சென்றனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்களை விரட்டி சென்று பிடித்தனர். அதில் சிக்கிய அனைவரும் 17 வயதுக்கு உட்பட்ட பிளஸ்-2 மாணவர்கள் என்பது தெரியவந்தது. 5 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, மதுரை மாநகர், அலங்காநல்லூர், சமயநல்லூர், நாகமலைபுதுக்கோட்டை மற்றும் சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு, செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்தவர்கள் என தெரியவந்தது.

காலையில் பள்ளிக்கு செல்லும் இவர்கள் மாலையில் இது போன்ற கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். திருடும் மோட்டார் சைக்கிளை திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வேலம்மாள் நகரைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் அஜித்குமார் (23) என்பவரிடம் கொடுத்து கள்ளச்சந்தையில் விற்று பணம் பெற்றுள்ளனர் என்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து பிளஸ்-2 மாணவர்கள் 5 பேர் மற்றும் அஜித்குமாரை போலீசார் கைது செய்தனர்.

காதலிகளுடன் உல்லாச சுற்றுலா

கைதான மாணவர்களுக்கு சிறுவயதிலேயே மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டதால் அதற்கு பணம் தேவைப்பட்டது. எனவே காலையில் பள்ளிக்கு மாணவர்கள் போன்று சென்று, மாலையில் யாரும் சந்தேகப்படாத வகையில் தொடர் கைவரிசை காட்டி வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு அந்த பணம் போதவில்லை.. அதில் அதிகமான பணம் கிடைத்ததால் அதனை வைத்து மது அருந்துவது மற்றும் ஆடம்பர வாழ்க்கை என உல்லாசமாக இருந்தனர். மேலும் காதலிகளுடன் கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு உல்லாச சுற்றுலா சென்று பணத்தை செலவழித்துள்ளனர் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதன் மூலம் மதுரை நகரில் கடந்த வாரத்தில் மட்டும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதாக 17 வயதுக்கு உட்பட்ட 10 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story