எருமப்பட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது

எருமப்பட்டி அருகே விவசாயி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 46). விவசாயி. இவருக்கு முருகேசன் (51) என்ற அண்ணணும், சரவணன் (41) என்ற தம்பியும் உள்ளனர். இதில் முருகேசனுக்கு திருமணமாகி தமிழ்செல்வி (40) என்ற மனைவி உள்ளார். சரவணனுக்கு திருமணமாகவில்லை. இவர்கள் அனைவரும் கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு சொந்தமான 12 ஏக்கர் விவசாய நிலம் கெஜகோம்பையில் உள்ளது. இந்த சொத்தை அடைய நினைத்த தமிழ்செல்வி மற்றும் அவருடைய தம்பி கேசவன் (32) மற்றும் தமிழ்ச்செல்வி தந்தை மோகன் ஆகியோர் செல்வராஜிடம் சொத்தை எழுதி கேட்டனர்.
இந்த நிலையில் செல்வராஜ் கெஜகோம்பையில் உள்ள தனது தோட்டத்திற்கு நடந்து சென்றபோது தலையில் பலத்த ரத்தக்காயத்துடன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இந்த கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சொத்து தகராறு காரணமாக தமிழ்செல்வி, கேசவன், மோகன் மற்றும் கன்னியப்பன் ஆகியோர் தோட்டத்துக்கு சென்ற செல்வராஜை இரும்பு கம்பியால் அடித்துக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து கேசவனை கைது செய்த போலீசார் தலைமறைவான தமிழ்செல்வி, மோகன் மற்றும் கன்னியப்பனை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த கன்னியப்பன் என்பவரை போலீசார் நேற்று கைது செய்தனர். இவர் கேசவன் நடத்தும் செங்கல் சூளையில் வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.






