ஆடுகள் திருடிய 4 பேர் கைது


ஆடுகள் திருடிய 4 பேர் கைது
x

ராமநாதபுரம் அருகே ஆடுதிருடிய கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 16 ஆடுகள் மற்றும் கடத்த வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம்


ராமநாதபுரம் அருகே ஆடுதிருடிய கும்பலை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். 16 ஆடுகள் மற்றும் கடத்த வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேய்ச்சல்

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ளது கிருஷ்ணாபுரம். இந்த ஊரைச் சேர்ந்தவர் அரியமுத்து (வயது55). இவர் ஏராளமான ஆடுகள் வைத்து பல்வேறு பகுதிகளில் கூலிக்கு ஆட்கள் அமைத்து வளர்த்து வருகிறார். இவ்வாறு ராமநாதபுரம் அருகே காரேந்தல் கிராம கண்மாய் கரையோரத்தில் ஏராளமான ஆடுகளை கிடை அமைத்து மேய்ச்சலுக்கு விட்டிருந்தார்.

இதற்காக தஞ்சாவூர் பேராவூரணி பகுதியை சேர்ந்த சிலரை வேலைக்கு அமர்த்தி இருந்தார். இந்நிலையில் காரேந்தல் பகுதியில் மேய்ந்து வந்த ஆடுகள் அடிக்கடி காணாமல் போய் வந்தது. அடிக்கடி இவ்வாறு காணாமல் போனதால் சந்தேகமடைந்த அரியமுத்து மற்றும் அவருக்கு வேண்டிய சிலரை வைத்து திருடர்களை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்டனர்.

வியாபாரிகள்

நேற்று முன்தினம் கண்மாய் கரையோரத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்த ஆடுகளில் 16 ஆடுகள் காணாமல் போய்இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அரியமுத்து ஆடுகளை மேய்த்தவர்களிடம் விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளனர்.

தீவிரமாக விசாரித்தபோது பேராவூரணியை சேர்ந்த சின்னத்துரை மகன் மணிகண்டன் (35), ராமன் மகன் லட்சுமணன் (40) ஆகிய 2 பேரும் தாங்கள்தான் ஆடுகளை திருடி மறைத்து வைத்திருப்பதாகவும் வியாபாரிகள் இரவில் வாங்க வர உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கண்மாய் கரையில் கருவேல மர காட்டுக்குள் 16 ஆடுகளை கட்டிப்போட்டு வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். இதன்பின்னர் மேற்கண்ட 2 பேர் மூலம் திருட்டு ஆடுகளை வாங்கும் வியாபாரிகளை மடக்கி பிடிக்க திட்டமிட்டு அவர்கள் மூலம் பேசி வரவழைத்துள்ளனர். இதன்படி ராமநாதபுரம் அருகே உள்ள சூரங்கோட்டை தேவதாஸ் மகன் இளையராஜா (32), சாக்கன்குடி சுப்பிரமணி மகன் சங்கர் (35) ஆகிய 2 பேரும் சரக்கு வாகனத்தில் திருட்டு ஆடுகளை வாங்க வந்துள்ளனர்.

கைது

அவர்களை சுற்றி வளைத்து பிடித்து ராமநாதபுரம் பஜார் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை மேய்த்து வந்த மணிகண்டன், லட்சுமணன் மற்றும் வாங்க வந்த இளையராஜா, சங்கர் ஆகிய 4 பேரை கைது செய்தனர். 16 ஆடுகள் மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story