பரிகாரம் செய்து மோதிரத்தில் தங்கத்தை திருடியவர் கைது
இறந்தவரின் ஆவி வீட்டு வாசலில் நின்று அழுவதாக பரிகாரம் செய்து மோதிரத்தில் தங்கத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
திருமங்கலம்,
இறந்தவரின் ஆவி வீட்டு வாசலில் நின்று அழுவதாக பரிகாரம் செய்து மோதிரத்தில் தங்கத்தை திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ஆவி
திருமங்கலம் காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சுபாஷ். இவரது தந்தை மாசானம் அண்மையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு அப்பகுதிக்கு வந்த குடுகுடுப்பைகாரன் சுபாஷின் வீட்டின் அருகே நின்று வீட்டில் இறந்த நபரின் ஆவி வீட்டு வாசலில் நின்று அழுது கொண்டிருப்பதாகவும், அதற்கு பரிகாரம் செய்ய வேண்டும் எனவும் கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் மீண்டும் நேற்று காலை வந்து சுபாஷிடம் இரவு சொன்ன விஷயங்களை கூறி பரிகாரம் செய்தால் நல்லது எனக் கூறியுள்ளார். இதனை நம்பிய சுபாசும் அவரது குடும்பத்தினரும் குடுகுடுப்பை காரனை வீட்டிற்குள் அழைத்து பரிகாரம் செய்துள்ளனர். வீட்டிற்குள் சென்று பரிகாரம் செய்த குடுகுடுப்பைக்காரன் ஒரு சிறிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதற்குள் தகடுகளை போட்டு சுபாஷ் கையில் ஒரு தகடையும் விபூதியையும் வைத்து இருக்கமாக மூடிக்கொண்டு பாத்திரத்திற்குள் கைவிடும் படி கூறியுள்ளார்.
மவுனம்
தண்ணீர் உள்ள பாத்திரத்துக்குள் கைவிட்டபோது கையில் சுடுவது போல் தெரிந்ததால் சுபாஷ் கையை எடுக்க முயன்றபோது குடு குடுப்பைக்காரன் மீண்டும் தண்ணீருக்குள் அழுத்தியுள்ளார். பின்னர் பரிகாரம் முடித்து பணம் கேட்டுள்ளார்.
வீட்டில் பணம் இல்லாததால் ஏ.டி.எம்.மில் எடுத்து வருவதாக கூறி சுபாஷ் சென்றார். அப்போது தனது கையில் ஒட்டி இருந்த விபூதியை துடைத்தபோது சுபாஷ் கையில் இருந்த மோதிரத்தில் தங்கம் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர் உடனடியாக வீட்டிற்கு வந்து குடுகுடுப்பைகாரனை விசாரித்த போது எந்த பதிலும் சொல்லாமல் மவுனமாக இருந்துள்ளார். இதையடுத்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
கைது
திருமங்கலம் நகர் போலீசார் விரைந்து வந்து குடுகுடுப்பைக் காரனிடம் விசாரணை நடத்தினர். இதில் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி முத்துராமலிங்கம் நகரை சேர்ந்த காளிமுத்து என்பவரது மகன் முத்து மணி (வயது 27) என்பது தெரியவந்தது. மேலும் பலரிடம் இதேபோல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து முத்துமணியை போலீசார் கைது செய்தனர்.