எருமப்பட்டி அருகே தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து; டிரைவர் கைது

எருமப்பட்டி அருகே தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து; டிரைவர் கைது
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிபட்டியை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மகன் கணேஷ் ராஜ் (வயது 28). டிப்ளமோ முடித்து விட்டு அரசு வேலைக்கு படித்து வருகிறார். இந்த நிலையில் திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே வால்வேல்புதூர் அண்ணா நகரை சேர்ந்த லாரி டிரைவர் ராஜதுரை (42) என்பவருடைய மோட்டார் சைக்கிளை வைத்து கணேஷ்ராஜ், சதீஷ் என்பவரிடம் பேசி 10 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி ராஜதுரைக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து பல நாட்கள் ஆகியும் ராஜதுரை ஊர் பக்கம் வராமல் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் காளிசெட்டிபட்டி வெங்கடாஜலபதி என்பவருடைய தோட்டத்தில் முன்பு வந்தபோது அங்கு வந்த கணேஷ் ராஜ் தான் வாங்கி கொடுத்த கடனை கேட்டார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
வாய்த்தகராறு முற்றியதில் ராஜதுரை தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணேஷ்ராஜின் இடது பக்க அடிவயிற்றில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கணேஷ்ராஜை அவருடைய அண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜதுரையை கைது செய்து சிறையில் அடைத்தனர்.






