காவேரிப்பட்டணத்தில் பரபரப்பு வங்கி பெண் அதிகாரிக்காக கள்ளக்காதலர்கள் மோதல் 5 பேர் கைது-கார் பறிமுதல்


காவேரிப்பட்டணத்தில் பரபரப்பு  வங்கி பெண் அதிகாரிக்காக   கள்ளக்காதலர்கள் மோதல்  5 பேர் கைது-கார் பறிமுதல்
x
தினத்தந்தி 30 Sep 2022 6:45 PM GMT (Updated: 30 Sep 2022 6:46 PM GMT)

காவேரிப்பட்டணத்தில் பரபரப்பு வங்கி பெண் அதிகாரிக்காக கள்ளக்காதலர்கள் மோதல் 5 பேர் கைது-கார் பறிமுதல்

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

காவேரிப்பட்டணத்தில் வங்கி பெண் அதிகாரிக்காக கள்ளக்காதலர்களில் ஒருவரை, மற்றொருவர் கடத்த முயன்ற போது ஏற்பட்ட மோதலால் பரபரப்பு நிலவியது. இது தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

வங்கி பெண் அதிகாரி

காஞ்சீபுரம் மாவட்டம் பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள சாமல் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவருடைய மனைவி உஷா (வயது 37). இவர்களுக்குள் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். உஷா அந்த பகுதியில் உள்ள தனியார் வங்கியில் வணிக வளர்ச்சி அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

அப்போது வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே உள்ள பள்ளிகொண்டா காமராஜர் நகரை சேர்ந்த ஐ.டி. கால் சென்டர் உரிமையாளர் அஜித்குமார் (26) என்பவருக்கும், உஷாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.

மற்றொரு கள்ளக்காதலன்

இந்த நிலையில் உஷா, கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் உள்ள வங்கி கிளைக்கு மாற்றப்பட்டார். பின்னர் காவேரிப்பட்டணத்திற்கு அடிக்கடி வந்து சென்ற அஜித்குமாருக்கும், உஷாவிற்கும் இடையே தகராறு ஏற்பட்டது. மேலும் மது குடித்து விட்டு வந்து அவர் உஷாவை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே மத்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்த பெயிண்டர் ஆறுமுகம் (40) என்பவருக்கும், உஷாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதல் ஆனது. அந்த நேரம் உஷாவிற்கும், அஜித்குமாருக்கும் இடையே உள்ள உறவு பற்றி ஆறுமுகத்திற்கு தெரியவந்தது.

அந்த தொடர்பை கைவிடுமாறு ஆறுமுகம், அஜித்குமாரிடம் கூறி வந்தார். ஆனால் அஜித்குமார் கள்ளத்தொடர்பை கைவிடவில்லை. இதனால் ஆறுமுகத்திற்கும், அஜித்குமாருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

காரில் கடத்த முயற்சி

இந்த நிலையில் நேற்று முன்தினம் மதியம் காவேரிப்பட்டணம் வந்த அஜித்குமார், உஷா பணிபுரியும் வங்கிக்கு சென்றார். பின்னர் அவர் உஷாவிடம் ஸ்கூட்டரை வாங்கி கொண்டு வெளியே வந்தார். அப்போது அஜித்குமார் வந்த தகவலை அறிந்த ஆறுமுகம், திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாபட்டு கிராமத்தை சேர்ந்த காத்தவராயன் (31), திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளியை சேர்ந்த எலக்ட்ரீசியன் பார்த்திபன் (32), மத்தூர் என்.மோட்டூரை சேர்ந்த சக்திவேல் (40), கண்ணன்டஅள்ளியை சேர்ந்த நெடுஞ்சாலைத்துறை காண்டிராக்டர் கிருஷ்ணமூர்த்தி (63) ஆகியோருடன் காரில் அங்கு வந்தார். பின்னர் அவர்கள் ஸ்கூட்டரில் சென்ற அஜித்குமாரை காரில் பின்தொடர்ந்து சென்றனர்.

இதனிடையே ஆறுமுகம் உள்பட 5 பேரும், ஸ்கூட்டரை முந்திச்சென்று காரை நிறுத்தினர். பின்னர் அஜித்குமாரை வழிமறித்து தாக்கி காரில் ஏற்றி கடத்தி செல்ல முயன்றனர். அப்போது ஏற்பட்ட மோதல் சம்பவத்தின் போது, அஜித்குமாரின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு சென்று அஜித்குமாரை மீட்டனர்.

5 பேர் கைது

மேலும் ஆறுமுகம், காத்தவராயன், பார்த்திபன், சக்திவேல், கிருஷ்ணமூர்த்தி ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரில் அவர்கள் வைத்திருந்த கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

அஜித்குமாரை கடத்தி கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டார்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காவேரிப்பட்டணம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story