சிகிச்சையின் போது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; 70 வயது டாக்டர் கைது
ராமநாதபுரத்தில் சிகிச்சையின்போது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது டாக்டர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரத்தில் சிகிச்சையின்போது கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 70 வயது டாக்டர் கைது செய்யப்பட்டார்.
சிகிச்சைக்கு சென்ற மாணவி
ராமநாதபுரம் சேதுபதிநகர் 2-வது தெருவை சேர்ந்தவர், ஜபருல்லாகான் (வயது70). இவர் ராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவரின் கிளினிக்கிற்கு 19 வயது கல்லூரி மாணவி ஒருவர் சிகிச்சைக்கு சென்றுள்ளார். சிகிச்சையின்போது அவருக்கு டாக்டர் ஜபருல்லாகான் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து மாணவி தன் தாயாரிடம் கூறியதை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
கைது
ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜபருல்லாகானை கைது செய்தனர்.
இதைத்தொடர்ந்து அவரை ராமநாதபுரம் கோர்ட்டில் நீதிபதி பிரபாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். அப்போது டாக்டர் ஜபருல்லாகான் திடீரென கோர்ட்டில் மயங்கி விழுந்தார். அதைத்தொடர்ந்து அவரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து போலீஸ் காவலில் சிகிச்சை அளிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
பரபரப்பு
பின்னர் அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் போலீஸ் காவலுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ராமநாதபுரத்தில் கல்லூரி மாணவியிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டதாக பிரபல டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.