மோகனூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் சாமியார் உள்பட 2 பேர் கைது மொபட் பறிமுதல்
மோகனூர் அருகே தொழிலாளி கொலை வழக்கில் சாமியார் உள்பட 2 பேர் கைது மொபட் பறிமுதல்
மோகனூர்:
மோகனூர் அருகே தொழிலாளி கொலை செய்யப்பட்ட வழக்கில் சாமியார் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
தொழிலாளி கொலை
மோகனூரில் இருந்து காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் சுண்டக்கா செல்லாண்டியம்மன் கோவில் அருகே உள்ள வாய்க்காலில் கடந்த மாதம் 10-ந் தேதி ஆண் ஒருவர் பிணமாக கிடந்தார். இதுகுறித்து மோகனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார். அதில் பிணமாக கிடந்தவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள நாகைநல்லூரை சேர்ந்த கூலித்தொழிலாளியான மணிவண்ணன் (வயது 44) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். அதில் மனைவியை பிரிந்து வாழ்ந்த மணிவண்ணனுக்கு திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த எம்.புத்தூர் தொட்டியபட்டியை சேர்ந்த சாமியாரான சீனிவாசன் (36) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
கைது
இதையடுத்து சாமியாரிடம், மணிவண்ணன் பிரிந்து வாழும் மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்க வேண்டும் என கூறி பணம் கொடுத்தார். ஆனால் சாமியார் சீனிவாசன் அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மணிவண்ணன், சீனிவாசனின் வீட்டுக்கு சென்று அவரை திட்டி தாக்கினார்.
இதனால் ஆவேசம் அடைந்த சீனிவாசன், அவருடைய தம்பி சரத்குமார் (30) ஆகியோர் சேர்ந்து கட்டையால் மணிவண்ணனை தாக்கியதில் அவர் கீழே விழுந்தார். பின்னர் அவரின் கழுத்தை அறுத்து கொலை செய்து உடலை மொபட்டில் வைத்து கொண்டு மோகனூர் அருகே உள்ள வாய்க்காலில் போட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து சீனிவாசன், சரத்குமாரை கைது செய்த மோகனூர் போலீசார் மொபட்டை பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.