மோசடி செய்த அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது
ராமநாதபுரம் வாலிபருக்கு ஆன்லைனில் குறைந்த விலைக்கு ஐபோன் வழங்குவதாக கூறி மோசடி செய்த நாகப்பட்டினத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம் வாலிபருக்கு ஆன்லைனில் குறைந்த விலைக்கு ஐபோன் வழங்குவதாக கூறி மோசடி செய்த நாகப்பட்டினத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஐபோன்
ராமநாதபுரம் அருகே உள்ள பொட்டகவயல் வடக்குத் தெருவை சேர்ந்தவர் மாலிக் என்பவரின் மகன் முகம்மது மைதீன் (வயது24). இவர் பி.சி.ஏ. படித்து முடித்து வீட்டில் இருந்து வருகிறார். கடந்த மாதம் 12-ந் தேதி ஐபோன் வாங்க முடிவு செய்து தனது செல்போனில் பிரபல விற்பனை செயலியில் தேடியுள்ளார்.
இதனை தொடர்ந்து ஒரு விளம்பரத்தில் ஐபோன் 11 வகை மாடல் ரூ.25 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டு இருந்ததை கண்டு அதில் இருந்த செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டு விவரம் கேட்டுள்ளார். புதிதாக உள்ள ஐபோன் ரூ.25 ஆயிரம் என்று கூறிய நபரிடம் முகம்மது மைதீன் ரூ.22 ஆயிரத்திற்கு தருமாறு பேரம் பேசி உள்ளார். முதலில் மறுத்த மர்ம நபர் பின்னர் ஒப்புக்கொண்ட நிலையில் அவர்கள் தெரிவித்த வங்கி கணக்கிற்கு கூகுள் பே மூலம் ரூ.22 ஆயிரம் செலுத்தி உள்ளார்.
அந்த பணத்தை பெற்றுக்கொண்ட மர்ம நபர் உடனடியாக ஐபோன் கூரியரில் அனுப்பி வைப்பதாக கூறியுள்ளார். இதனால் மகிழ்ச்சியுடன் காத்திருந்த முகம்மது மைதீனுக்கு ஐபோன் வராததால் சந்தேகமடைந்து அவர்களை தொடர்பு கொண்டபோது செல்போன் எண்கள் அனைத்தும் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த முகம்மது மைதீன் இதுகுறித்து சைபர்கிரைம் போலீசில் புகார் செய்தார்.
விசாரணை
இதனை தொடர்ந்து ராமநாதபுரம் சைபர்கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் திபாகர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்தனர்.
தொழில்நுட்ப அடிப்படையில் மேற்கண்ட வங்கி கணக்கு மற்றும் செல்போன் எண்கள் ஆகியவற்றை வைத்து ஆராய்ந்தபோது சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் இருந்து இந்த மோசடி நடப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் அடிப்படையில் சைபர்கிரைம் போலீசார் இரவோடு இரவாக சென்னை சென்றனர்.
சென்னை சோழிங்கநல்லூர் கோட்டை மேட்டுத்தெருவில் சென்று பார்த்தபோது ஒரு அறையில் 4 பேர் மடிக்கணினி சகிதம் இருந்து செல்போனில் பேரம் பேசியபடி மும்முரமாக பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது 4 பேரும் நாகப்பட்டினம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரிந்தது.
4 பேர் பிடிபட்டனர்
இதனை தொடர்ந்து நாகப் பட்டினம் பக்கிரிசாமி மகன் ரமேஷ் (29), தெற்கு பால்பண்ணைசேரி சுனாமி குடியிருப்பு யூசுப்ஜலாலுதீன் மகன் முகம்மது ஹாரீஸ் (23), அவரின் தம்பி முகம்மது தவ்பீக் (20), நாகை அம்மன்கோவில் தெரு மருதுகொத்தாள ரோடு பகுதியை சேர்ந்த அய்யப்பன் மகன் சுதர்சன் (20) ஆகிய 4 பேரையும் பிடித்து விசாரித்தனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட 4 பேரும் வேலை தேடி சென்னை வந்ததாகவும் ஆரம்பத்தில் தெரிந்தவர்களிடம் செல்போன், லேப்டாப் உள்ளிட்டவைகளை வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்ததாகவும் தெரிவித்தனர்.
இவ்வாறு தொழில் செய்தபோது தங்களை முகநூலில் சிலர் ஏமாற்றி மோசடி செய்ததாகவும் அதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்து உண்மையாக நடக்கும் நம்மிடம் இந்த சமுதாயம் ஏன் மோசடி செய்கிறது. அதனால் நாம் மட்டும் ஏன் உண்மையாக நடக்க வேண்டும் நாமும் இந்த சமுதாயத்தை ஏமாற்ற வேண்டும் என்று கருதி குறைந்த விலைக்கு செல்போன் விற்பனை செய்வதாக கூறி சிலரிடம் மோசடி செய்தபோது அதில் பெரிய பாதிப்பு வராததால் ஆன்லைனில் போலி முகவரிகளை தொடங்கி மோசடியை தொடர்ந்து செய்ததாகவும் தெரிவித்தனர்.
24 பேரிடம் மோசடி
இதற்காக போலி முகவரி பெயரில் சிம் கார்டுகளை வாங்கியதோடு வங்கி கணக்குகளை திறந்து அதன்மூலம் இந்த மோசடியை நடத்தி வந்ததாகவும் தெரிவித்தனர். இதுவரை குறைந்தவிலைக்கு ஐபோன், மடிக்கணினி விற்பனை செய்வதாக 24 பேர் வரை மோசடி செய்துள்ளதாக பரபரப்பு தகவலை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து பணம், மடிக்கணினி போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.