திருச்செங்கோட்டில் புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது


திருச்செங்கோட்டில்  புதுப்பெண் தற்கொலை வழக்கில் கணவர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2022 6:45 PM GMT (Updated: 11 Dec 2022 6:47 PM GMT)
நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் அத்தியப்பன் (வயது 55). இவருடைய மகள் வசுமதி (23). என்ஜினீயரான இவருக்கும், நாமக்கல் அருகே நல்லிபாளையம் பகுதியை சேர்ந்த வினோத் (31) என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி திருமணம் நடந்தது. இந்தநிலையில், வரதட்சணை கேட்டு வசுமதியை அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியார் கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையில் இருந்த வசுமதி கடந்த மாதம் 30-ந் தேதி தனது பெற்றோர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதனிடையே, கடந்த 9-ந் தேதி சிகிச்சை பலனின்றி வசுமதி உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் விசாரணை நடத்தி வசுமதியின் கணவர் வினோத், மாமனார் சுப்பிரமணி, மாமியார் அமுதா, வினோத்தின் சகோதரி காவியா ஆகிய 4 பேர் மீது வரதட்சணை கொடுமை, தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்தனர்.

வசுமதியின் தற்கொலைக்கு காரணமான 4 பேரையும் கைது செய்தால் மட்டுமே அவரது உடலை வாங்குவோம் எனக்கூறி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று மல்லசமுத்திரம் பஸ் நிலையத்தில் நின்ற வினோத்ைத திருச்செங்கோடு நகர போலீசார் கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story