வழித்தட தகராறில் விவசாயியை தாக்கியவர் கைது
பரமத்திவேலூர்:
சோழசிராமணி அருகே உள்ள வெய்யகாஞ்சன் புதூர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (55). விவசாயி. அதே பகுதியை சேர்ந்தவர் ராசு (43). விவசாயி. இவர்களின் தோட்டம் அருகருகே உள்ளது. மேலும் 2 பேருக்கும் இடையே தோட்டத்தில் வழி சம்பந்தமாக தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெரியசாமி அவருடைய தோட்டத்திற்கு சென்றபோது, அங்கு நின்ற ராசு தகாத வார்த்தைகளால் திட்டியதால் இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.
இதில் ஆத்திரம் அடைந்த ராசு அங்கு கிடந்த கல்லை எடுத்து பெரியசாமி மீது வீசி தாக்கினாராம். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து பெரியசாமியை மீட்டு திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின்பேரில் ஜேடர்பாளையம் வழக்குப்பதிவு செய்து ராசுவை கைது செய்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு பரமத்தி கிளை சிறையில் அடைத்தனர்.