காரில் கடத்தி வரப்பட்ட252 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்வடமாநில வாலிபர் கைது
நாமக்கல் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 252 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் வடமாநில வாலிபரை கைது செய்தனர்.
வாகன சோதனை
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி செல்வதாக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அவரது உத்தரவின்பேரில் நாமக்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான போலீசார் நேற்று அதிகாலை 5 மணி அளவில் நாமக்கல்- –திருச்சி சாலை சின்னவேப்பனம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணை
பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலம் ஜலூர் மாவட்டத்தை சேர்ந்த குரோடாகி தாணி பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து 30 மூட்டைகளில் இருந்த ரூ.2½ லட்சம் மதிப்புள்ள 252 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ரூ.6 லட்சம் மதிப்பிலான காரை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.