காரிமங்கலம் அருகேமுன்விரோதத்தில் பயிர்களை சேதப்படுத்திய பெண் கைது 3 பேருக்கு வலைவீச்சு
காரிமங்கலம்:
காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 40). விவசாயி. இவர் முக்குளம் ஊராட்சியில் சந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கி நெல், கரும்பு பயிர்களை நடவு செய்து விவசாயம் செய்து வருகிறார். பயிர்களை பாதுகாக்கும் வகையில் நிலத்தை சுற்றிலும் கற்கள் போட்டு கம்பி வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் செல்வத்திற்கும், சீகலஅள்ளி கிராமத்தை சேர்ந்த கெவரன் என்பவருக்கு இடையே நிலம் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கெவரன் மற்றும் அவருடைய மனைவி அமுதா மற்றும் சிலர் செல்வத்தின் நிலத்தில் நுழைந்து அறுவடைக்கு தயாராக இருந்த கரும்பு மற்றும் நெற்பயிர்களை சேதப்படுத்தியதாக தெரிகிறது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த செல்வம் இதனை தட்டிகேட்ட போது அவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து செல்வம் கொடுத்த புகாரின்பேரில் காரிமங்கலம் போலீசார் கெவரன், அவருடைய மனைவி அமுதா மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம் ஜெகதாப் பகுதியை சேர்ந்த சரவணன், பாலக்கோடு சீரியம்பட்டியைச் சேர்ந்த மாதேஷ் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அமுதாவை போலீசார் கைது செய்தனர்.