பர்கூர் பகுதியில்3 போலி டாக்டர்கள் கைதுகிளினிக்குகள், மருந்தகத்திற்கு `சீல்'


பர்கூர் பகுதியில்3 போலி டாக்டர்கள் கைதுகிளினிக்குகள், மருந்தகத்திற்கு `சீல்
x
தினத்தந்தி 8 April 2023 7:00 PM GMT (Updated: 8 April 2023 7:00 PM GMT)
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் பகுதியில் மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்த போலி டாக்டர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

புகார்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் மற்றும் கந்திகுப்பம் பகுதிகளில் முறையாக மருத்துவம் படிக்காமல் சிலர் மருந்தகங்களில் பொதுமக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வருவதாக மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்பிற்கு புகார் வந்தது. இதனை தொடர்ந்து நேற்று மாலை கந்திகுப்பம், பசவண்ணா கோவில், பர்கூர் மற்றும் ஜெகதேவி பகுதியில் மருத்துவக் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் கந்திகுப்பம் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பசவண்ண கோவில் கிராமத்தில் உள்ள மருந்தகத்தில் ஆய்வு செய்தபோது திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி பாலனாங்குப்பம் பகுதியை சேர்ந்த நதீம் (வயது 25) என்பவர் 10-ம் வகுப்பு வரை படித்துவிட்டு தனது நண்பரின் சான்றிதழ் மூலம் உரிமம் பெற்று மருந்தகம் நடத்திவந்தது தெரிந்தது.

கைது

இவர் அப்பகுதி மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சையளித்து வந்ததும் கண்டறிந்தனர். இதேபோல் பர்கூர் ஜெகதேவி சாலையில் பிளஸ்-2 படித்துவிட்டு., தனியார் கிளினிக் நடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மிதுன்குமார் (27) மற்றும் ஜெகதேவியில் பி.காம் படித்துவிட்டு தனியார் கிளினிக் நடத்தி வந்த திருப்பத்தூர் மாவட்டம் குண்டல மலையூர் தோக்கியம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (50) ஆகிய 2 பேரையும் மருத்துவக்குழுவினர் நேற்று மாலை கண்டறிந்தனர்.

இதனை தொடர்ந்து மருந்தகம், தனியார் கிளினிக்குகளுக்கு `சீல்' வைத்து அங்கிருந்து மருத்துவ உபகரணங்களை குழுவினர் பறிமுதல் செய்தனர். மேலும் முறையாக மருத்துவம் படிக்காமல் பொதுமக்களுக்கு சிகிச்சையளித்த நதீம், மிதுன்குமார் மற்றும் கோவிந்தராஜ் உள்ளிட்ட 3 பேரை கந்திகுப்பம் மற்றும் பர்கூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.


Next Story