கம்பைநல்லூர் பகுதிகளில்ஊமத்தங்காய் பானம் தயாரித்தவர் கைதுமேலும் ஒருவருக்கு வலைவீச்சு
மொரப்பூர்:
கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோக பிரகாஷ் தலைமையில் போலீசார் கம்பைநல்லூர் அம்பேத்கர் நகர் மயானம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரை பார்த்ததும் ஒருவர் கையில் வைத்திருந்த குடத்தை வைத்துவிட்டு தப்பி ஓடி விட்டார். இதையடுத்து போலீசார் அந்த குடத்தில் பார்த்தபோது அதில் போதையை அதிகமாகும் ஊமத்தங்காய் மற்றும் இலைகளால் தயாரிக்கப்பட்ட 5 லிட்டர் பானம் இருந்தது. இதனை ெதாடர்ந்து போலீசார் பானத்தை கீழே கொட்டி அழித்தனர். போலீசார் விசாரணையில் தப்பி ஓடியவர் அம்பேத்கர் நகரை சேர்ந்த சேட்டு மகன் சக்திவேல் என தெரியவந்தது. அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கம்பைநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யோக பிரகாஷ் தலைமையில் போலீசார் குண்டல்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது குண்டல்பட்டியில் சின்னசாமி என்பவருக்கு சொந்தமான நிலத்தில் ஒருவர் குடத்துடன் நின்று கொண்டிருந்தார். போலீசாரை பார்த்தவுடன் அவர் தப்பி ஓட முயன்றபோது அந்த நபரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர் போச்சம்பள்ளி அருகே உள்ள கெட்டம்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சிலம்பரசன் (வயது 29) என்பது தெரியவந்தது. அவர் போதை அதிகமாக்கும் ஊமத்தங்காய் மற்றும் இலையால் தயாரிக்கப்பட்ட பானத்தை குடத்தில் 5 லிட்டர் வைத்து இருந்தது தெரியவந்தது. உடனடியாக பானத்தை கைப்பற்றி அழித்தனர். இதுதொடர்பாக சிலம்பரசனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.