தேவகோட்டையில்ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை கொடுத்தவர் கைது
தேவகோட்டையில்ஓய்வுபெற்ற ஆசிரியரிடம் வேறு ஒரு ஏ.டி.எம்.கார்டை கொடுத்தவர் கைது செய்யப்பட்டார்
தேவகோட்டை,
தேவகோட்டை அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 85). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் நேற்று காலை தனது ஓய்வூதியத்தில் இருந்து பணம் எடுக்க தேவகோட்டையில் உள்ள ஏ.டி.எம்.க்கு வந்துள்ளார். பணம் எடுக்க முயற்சி செய்த போது அருகில் நின்றிருந்த வாலிபர் பணம் எடுத்து தருவதாக சொல்லி அவரது ஏ.டி.எம். கார்டை வாங்கி ரூ.9,950 எடுத்து கொடுத்துவிட்டு போலியான ஏ.டி.எம். கார்டை ராமசாமியிடம் மாற்றி கொடுத்துவிட்டு அங்கிருந்து செல்ல முயன்றார். அப்போது ராமசாமி அந்த ஏ.டி.எம். கார்டில் இருந்த பெயரை பார்த்து அது வேறு ஏ.டி.எம். கார்டு என தெரிந்ததும் சத்தம் போட்டு அந்த வாலிபரை பிடிக்க முயன்றார். அதற்குள் அவர் தப்பித்து ஓடினார்.
ராமசாமி சத்தம் போடவே அருகில் இருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை மடக்கி பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை தாலுகா தோகமலை அருகே உள்ள நெசவாளர் காலனியைச் சேர்ந்த தேவராஜன் மகன் காட்ஜான் (21) என தெரியவந்தது. இவர் மீது புதுக்கோட்டை, வந்தவாசியில் இதே போன்ற வழக்குகள் உள்ளன. விசாரணைக்கு பின்னர் தேவகோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். நீதிபதி மாரிமுத்து அவரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இவரிடம் இருந்த 32 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.