கம்பைநல்லூர் பகுதியில்போலி டாக்டர் கைது
மொரப்பூர்:
கம்பைநல்லூர் பகுதியில் போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
போலி டாக்டர்
தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூர் பகுதியில் எம்.பி.பி.எஸ். படிக்காமல் மருத்துவம் பார்ப்பதாக தர்மபுரி மாவட்ட சுகாதார நலப்பணிகள் இணை இயக்குனர் சாந்திக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் அவரது தலைமையில் மருத்துவ குழுவினர் கம்பைநல்லூர் பகுதியில் உள்ள பல்வேறு பகுதியில் சோதனை செய்தனர். அப்போது கம்பைநல்லூர் பகுதியில் சரவணன் (வயது 55) என்பவர் பிளஸ்-2 வரை மட்டுமே படித்து விட்டு மருத்துவம் பார்த்தது தெரியவந்தது.
கைது
இதையடுத்து அவரிடம் இருந்த ரூ.31 ஆயிரத்து 834 மதிப்புள்ள மருந்து, மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இந்த சம்பவம் குறித்து அரூர் அரசு தலைமை டாக்டர் ராஜேஷ் கண்ணன் கம்பைநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் கம்பைநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கம்பைநல்லூர் பகுதியில் போலி டாக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.