சூளகிரி அருகேஇரும்பு கம்பிகள் திருடிய 2 டிரைவர்கள் கைது
சூளகிரி:
சேலத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 35). இவர் சொந்தமாக லாரி வைத்து தொழில் செய்து வருகிறார். இவரிடம் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள செங்காட்டுப்பட்டியை சேர்ந்த நெப்போலியன் (35), தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா லிங்காபுரத்தை சேர்ந்த ராமராஜ் (35) ஆகிய 2 பேர் டிரைவர்களாக வேலை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி இரவு லாரியில் இருவரும் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து புதுச்சேரிக்கு இரும்பு கம்பிகளை ஏற்றி கொண்டு சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே காளிங்காவரம் பகுதியில் லாரி வந்தபோது டிரைவர் லாரியை நிறுத்தினார். பின்னர் 2 பேரும் சேர்ந்து 100 கிலோ இரும்பு கம்பிகளை திருடி அந்த பகுதியில் உள்ள ஒரு தாபா ஓட்டல் அருகே வைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் அவர்கள் லாரியை புதுச்சேரிக்கு ஓட்டி சென்று இரும்பு கம்பிகளை இறக்கினர். அப்போது இரும்பு கம்பிகளை எடை போட்டு பார்த்தபோது 100 கிலோ குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து புதுச்சேரியை சேர்ந்த நிறுவனத்தினர், லாரி உரிமையாளர் ரவிச்சந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து நெப்போலியனும், ராமராஜூம் இரும்பு கம்பிகளை திருடி சூளகிரி அருகே பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து ரவிச்சந்திரன் சூளகிரி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரும்பு கம்பிகள் திருடிய நெப்போலியன் மற்றும் ராமராஜ் ஆகியோரை கைது செய்தனர்.