ஊத்தங்கரை அருகேகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலைஉறவினர்கள் சாலை மறியல்; வாலிபர் கைது


ஊத்தங்கரை அருகேகல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலைஉறவினர்கள் சாலை மறியல்; வாலிபர் கைது
x
தினத்தந்தி 15 April 2023 7:00 PM GMT (Updated: 15 April 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

ஊத்தங்கரை:

ஊத்தங்கரை அருகே கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார். மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கல்லூரி மாணவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அடுத்த நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 48). மேஸ்திரி. இவருடைய மனைவி தமிழரசி. முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர். இவர்களுடைய இளைய மகள் தமயந்தி (வயது 19).

இவர் கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தமயந்தி தனது வீட்டில் உள்ள விட்டத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சிங்காரப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தமயந்தியின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.

சாலை மறியல்

இதற்கிடையே மாணவியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர். பின்னர் அவர்கள் அதே ஊரை சேர்ந்த ஸ்ரீநாத் (25) என்பவர் தமயந்தியிடம் தன்னை காதலிக்க கூறி வற்புறுத்தியும், மன உளைச்சலை ஏற்படுத்தியும் தற்கொலைக்கு தூண்டியதாகவும், அவரை உடனடியாக கைது செய்யக்கோரியும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து அங்கு சென்ற ஊத்தங்கரை போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனை தொடர்ந்து மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக ஸ்ரீநாத்தை போலீசார் கைது செய்தனர்.

தாக்குதல்

இது ஒருபுறம் இருக்க தமயந்தி தற்கொலைக்கு ஸ்ரீநாத் தான் காரணம் என கூறி அவர் கைது செய்யப்பட்டதை அறிந்த ஸ்ரீநாத் உறவினர்கள் தற்கொலை செய்து கொண்ட தமயந்தியின் உடலை வீட்டில் இருந்து மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் போது கல் மற்றும் கட்டையால் தமயந்தின் உறவினர்களை தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story