பஸ் கண்டக்டர், டிரைவரை தாக்கிய வாலிபர் கைது
பாப்பிரெட்டிப்பட்டி:
கடத்தூர் நியூ காலனி பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 51). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பொம்மிடி கிளையில் கண்டக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு டிரைவர் வீரமகேந்திரன் மற்றும் கண்டக்டர் பன்னீர்செல்வம் ஆகியோர் பயணிகளை ஏற்றிக்கொண்டு பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து பொம்மிடி நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வெங்கடசமுத்திரம் பகுதியை சேர்ந்த காந்தி மகன் தமிழரசன் (வயது 22) என்பவர் மோட்டார் சைக்கிளில் மது போதையில் பஸ்சின் முன்னாலும், பின்னாலும் வழிமறித்து கொண்டே வந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்டக்டர் பன்னீர்செல்வம் பஸ் முன்னாடி இப்படி வருகிறாயே? என கேட்டதாக தெரிகிறது. இதில் கோபமடைந்த தமிழரசன் தகாத வார்த்தையால் பேசி கண்டக்டரை தாக்கினார். இதை தட்டி கேட்ட டிரைவரையும் தாக்கி அரசு பணி செய்ய விடாமல் தடுத்து கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து கண்டக்டர் பன்னீர்செல்வம் பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து தமிழரசனை கைது செய்தார்.