தர்மபுரி மாவட்டத்தில் மதுபாட்டில்கள் பதுக்கிய 24 பேர் கைது
தொழிலாளர்கள் தினத்தையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் நேற்று மூடப்பட்டன. இதையொட்டி மது பாட்டில்களை பதுக்கி விற்பனை செய்கிறார்களா என்பது குறித்து சோதனை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் உத்தரவிட்டிருந்தார்.
அதன்பேரில் அந்தந்த பகுதிகளில் போலீசார் தீவிர வாகன தணிக்கை மற்றும் சோதனையில் ஈடுபட்டனர். டாஸ்மாக் கடைகளில் அதிகளவு மது பாட்டில்களை யார் வாங்கினார்கள் என்பதை தீவிரமாக கண்காணித்து சோதனை நடத்தினர். அப்போது மதுக்கடைகளில் அதிக மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு விற்பனை செய்வதற்காக எடுத்து சென்ற 24 பேர் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 7 இருசக்கர வாகனங்களும், 750 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தீவிர சோதனையின் போது 20 லிட்டர் சாராயமும், 1,000 லிட்டர் ஊறல்களும்கண்டுபிடிக்கப்பட்டு அழிக்கப்பட்டது.