கோபி அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.25½ லட்சம் கையாடல்; தலைவர் உள்பட 3 பேர் கைது


கோபி அருகே கூட்டுறவு சங்கத்தில் ரூ.25½ லட்சம் கையாடல்; தலைவர் உள்பட 3 பேர் கைது
x

கோபி அருகே சவுண்டப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.25½ லட்சம் கையாடல் செய்த சங்க தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஈரோடு

கோபி அருகே சவுண்டப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.25½ லட்சம் கையாடல் செய்த சங்க தலைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

ரூ.25½ லட்சம் கையாடல்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே சவுண்டப்பூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தின் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த பயிர் கடன், நகை கடனை கடந்த 2019-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை சங்க ஊழியர்கள் வசூலித்தனர். ஆனால் வசூலிக்கப்பட்ட தொகை சங்கத்தின் வங்கி கணக்கில் செலுத்தப்படவில்லை.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் விசாரணை நடத்தினார். விசாரணையில், சவுண்டப்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுகடன் சங்கத்தில் உறுப்பினர்கள் செலுத்திய ரூ.25 லட்சத்து 53 ஆயிரம் கையாடல் செய்யப்பட்டதும், சங்க தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியான சவுண்டப்பூரை சேர்ந்த ரமேஷ் பணத்தை கையாடல் செய்ததும், அதற்கு சங்க ஊழியர்களான கோபி புதுக்கரைபுதூரை சேர்ந்த சத்தியமூர்த்தி (53), கோபி புதுக்காடு பகுதியை சேர்ந்த தங்கமுத்து (55) ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது.

3 பேர் கைது

இந்த நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக ஈரோடு வணிக குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் துணைப்பதிவாளர் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ரமேஷ், சங்க ஊழியர்களான சத்தியமூர்த்தி, தங்கமுத்து ஆகிய 3 பேரையும் நேற்று போலீசார் கைது செய்தனர்.


Next Story