ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது
ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்
காரைக்குடி
குன்றக்குடி பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை ஆன் லைன் மூலம் விற்பனை செய்வதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலினுக்கு தகவல் கிடைத்தது. அவருடைய உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலை மையிலான போலீசார் தீவிர விசாரணை நடத்தி பிள்ளையார் பட்டியை சேர்ந்த சீனிவாசன்(வயது 26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி சீட்டுக்கான டோக்கன்கள் மற்றும் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. இவர் ஏற்கனவே ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் விற்றதாக கைது செய்யப்பட்டு ரூ.6 லட்சம் பணம் கைப்பற்றப்பட்ட வழக்கில் நிபந்தனை ஜாமினில் கையெழுத்து போட்டு வருகிறார். தற்போது மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீனிவாசன் கொடுத்த தகவலின்பேரில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்யும் கும்பலின் தலைவன் ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த சந்திரசேகரன்(45), அவரது மேலாளர் அருண்பாண்டியன்(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சொகுசு கார், 2 செல்போன், லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சந்திர சேகரனின் வங்கி கணக்கில் இருந்த ரூ.16 லட்சம் முடக்கப்பட்டது. இவர்கள் தமிழக முழுவதும் ஏஜெண்டுகளை நியமித்து, அலுவலகங்கள் அமைத்து கோடிக்கணக்காண ரூபாய்களில் ஆன்லைன் லாட்டரி சீட்டுகளை விற்று வருவது தெரியவந்தது. மேலும் அவர்களிடம் தொடர் விசாரணை நடந்து வருகிறது.