கபிலர்மலை அருகேசிறுமியிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
பரமத்திவேலூர்:
கபிலர்மலை அருகே உள்ள பெரியமருதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்நாதன். இவருடைய மகள் தனுஸ்ரீ (வயது 14). இவர் நேற்று முன்தினம் தனது சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் நின்ற 2 பேர் சைக்கிளை நிறுத்தி சிறுமி கழுத்தில் அணிந்திருந்த தங்க செயினை பறிக்க முயன்றனர். அப்போது நிலைதடுமாறி சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த தனுஸ்ரீ சத்தம் போடவே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் 2 பேரும் தப்பி ஓட முயன்றனர்.
ஆனால் பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து தர்மஅடி கொடுத்து வேலூர் போலீசில் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் இந்திராணி வழக்குப்பதிவு செய்து சிறுமியிடம் நகை பறிக்க முயன்றதாக கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த கருப்புசாமி மகன் ரமேஷ்குமார் (32), மதுக்கரை பகுதியை சேர்ந்த முருகேசன் மகன் கிஷோர்குமார் (21) ஆகியோரை கைது செய்தனர்.