வக்கீலுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் கைது2 பேருக்கு வலைவீச்சு
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் நீலாபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். இவருக்கும் அனுமந்தபுரத்தை சேர்ந்த திருப்பதி என்பவருக்கும் கார் விற்பனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதுதொடர்பாக இருதரப்பினரும் பைசுஅள்ளி என்ற இடத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்றபோது தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இந்த நிலையில் பிரச்சினை தொடர்பாக சமாதானத்திற்கு சென்ற காரிமங்கலம் ராமாபுரத்தை சேர்ந்த வக்கீல் பாரதி என்பவருக்கு தர்மபுரி டவுன் பிடமனேரி பகுதியை சேர்ந்த சேதுராமன் (வயது 30), சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்த அமராவதி புதூர் பகுதியை சேர்ந்த மதுபாலா (26) மற்றும் சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வக்கீல் பாரதி கொடுத்த புகாரின்பேரில் காரிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன், சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து சேதுராமன் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவான 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.