கூட்டுறவு வங்கி நகைகளை ஏலம் எடுத்து தருவதாக கோவில்பட்டி தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி24 மணி நேரத்தில் இளம்பெண்கள் உள்பட 5 பேர் கைது


தினத்தந்தி 2 Jun 2023 7:00 PM GMT (Updated: 2 Jun 2023 7:00 PM GMT)
நாமக்கல்

ராசிபுரம்:

கோவில்பட்டியை சேர்ந்த தொழில் அதிபரிடம் ரூ.30 லட்சம் மோசடி செய்த 3 இளம்பெண்கள் உள்பட 5 பேரை ராசிபுரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சொகுசு கார் மற்றும் பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தொழில் அதிபர்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அறிஞர் அண்ணா நகரை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 49). தொழில் அதிபரான இவர் ரியல் எஸ்டேட், பத்திரப்பதிவு, ஆர்.ஓ.வாட்டர் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களை செய்து வந்தார். இவருக்கும், திருப்பூரை சேர்ந்த ஜெய் (35), சேலம் மேற்கு வீதி குமாரசாமிப்பட்டி தெருவை சேர்ந்த தனசேகர் (59) ஆகியோருக்கும் இடையே தொழில் சம்பந்தமாக பழக்கம் ஏற்பட்டது.

இவர்கள் மூலம் நாமக்கல் மாவட்டம் வெப்படை பாரதி நகரை சேர்ந்த சிவஞானம் (50) என்பவருடன் ஜெகநாதனுக்கு பழக்கம் ஏற்பட்டது. சிவஞானம் நூல் மில் மேற்பார்வையாளராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் போனில் அடிக்கடி பேசி வந்ததாக தெரிகிறது. மேலும் ஜெகநாதனிடம் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை சிவஞானம் தெரிந்து கொண்டார்.

ஆசைவார்த்தை

இதுபற்றி தனது கூட்டாளிகளான சேலம் மாவட்டம் சங்ககிரி அக்கமாபேட்டை முருகன் கோவில் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (55), அவருடைய மனைவி கெஜலட்சுமி (43) கெஜலட்சுமியின் உறவினர் திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மகாதேவி கிராமத்தை சேர்ந்த ஜானகி என்கிற புவனேஸ்வரி (26) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து தொழில் அதிபர் ஜெகநாதனிடம் உள்ள பணத்தை நூதன முறையில் பறிக்க திட்டம் தீட்டினர்.

அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவஞானம், ஜெகநாதனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தனக்கு தெரிந்த புவனேஸ்வரி நாமக்கல் மாவட்டத்தில் சுமார் 25 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு தலைமை பொறுப்பில் இருப்பதாகவும், கொரோனா காலத்தில் அடமானம் வைக்கப்பட்டு திருப்ப முடியாமல் இருந்த நகைகளை ஏலம் எடுத்து கொடுப்பதாக கூறி ஜெகநாதனுக்கு புவனேஸ்வரியை அறிமுகம் செய்து வைத்துள்ளார். மேலும் 165 பவுன் நகைகள் ஒரே பண்டலாக வைத்திருப்பதாகவும் அதற்காக ரூ.30 லட்சம் கொண்டு வந்தால் நகைகளை வாங்கி தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

பணத்துடன் தப்பினர்

இதை நம்பிய ஜெகநாதன் கடந்த 31-ந் தேதி சிவஞானத்தை அழைத்து கொண்டு ஒரு காரில் ராசிபுரம் வந்தார். பின்னர் ராசிபுரம் அருகே ஆண்டகளூர்கேட்டில் நின்ற புவனேஸ்வரியை அழைத்து கொண்டு 3 பேரும் ராசிபுரம் வந்துள்ளனர். நகராட்சி அலுவலகம் அருகே ஜெகநாதன் புவனேஸ்வரியிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்தார். அதனை பெற்ற புவனேஸ்வரி தான் பணத்தை கட்டிவிட்டு நகையை வாங்கி வருவதாக கூறிவிட்டு ஆர்.சி.எம்.எஸ். சங்கத்துக்கு சென்றார்.

ஆனால் வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. பின்னர் அவர் பர்தா அணிந்து கொண்டு ராசிபுரம் முனியப்பன் கோவில் அருகே நாமக்கல் பொன்விழா நகரைச் சேர்ந்த சத்யா (36), கெஜலட்சுமி, ராமச்சந்திரன் ஆகியோர் உதவியுடன் காரில் தப்பி நாமக்கல்லுக்கு சென்றார்.

தனிப்படை போலீஸ்

மோசடி செய்த பணத்தை சத்யா மற்றும் கெஜலட்சுமி ஆகியோருக்கு பிரித்து கொடுத்துவிட்டு அங்கிருந்து சொகுசு காரில் பணத்துடன் புவனேஸ்வரி தப்பி சென்றார். இதற்கிடையே புவனேஸ்வரி திரும்பி வராததால் ஜெகநாதன் அதிர்ச்சி அடைந்தார். அப்போது சிவஞானம் தனக்கு ஒன்றும் தெரியாதது போல் ஜெகநாதனிடம் நாடகம் ஆடினார்.

இதுகுறித்து ஜெகநாதன் ராசிபுரம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

போலீசாருக்கு பாராட்டு

தனிப்படை போலீசார் புவனேஸ்வரி, சிவஞானம், சத்யா, கெஜலட்சுமி, ராமச்சந்திரன் ஆகிய 5 பேரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.22 லட்சத்தையும், அவர்கள் பயன்படுத்திய சொகுசு காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். 24 மணி நேரத்தில் மோசடி கும்பலை கைது செய்து பணத்தை மீட்டதற்காக நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ராசிபுரம் போலீசாரை பாராட்டினார்.

கைது செய்யப்பட்ட 5 பேருக்கும் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து ஜானகி, சிவஞானம், சத்யா, கெஜலட்சுமி, ராமச்சந்திரன் ஆகிய 5 பேரையும் போலீசார் சேந்தமங்கலம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.


Next Story