ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை
பேக்கரி உரிமையாளரை மிரட்டி ரூ.50 லட்சம் பறித்த வழக்கில் மேலும் ஒருவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
ரூ.50 லட்சம் பறிப்பு
கல்லலில் பேக்கரி நடத்தி வந்தவர் நாச்சியப்பன்(வயது 55). இவர் அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அந்த சிறுமியின் உறவினர் ஒருவர் போலீசில் புகார் செய்தார். இந்த சம்பவத்தில் நாச்சியப்பன் மீது வழக்குப்பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவரிடமிருந்து சிலர் ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த நாச்சியப்பன் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் புதுக்கோட்டை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் இறந்த நாச்சியப்பனின் மனைவி சகுந்தலா தேவி தன்னுடைய கணவர் நாச்சியப்பன் மீது பாலியல் குற்றம் சுமத்தி அவரிடமிருந்து ரூ.50 லட்சம் வரை பெற்றுக்கொண்டு மிரட்டியதால் அவர் தற்கொலை செய்துகொண்டார் எனவும், இந்த வழக்கில் சி.பி.சி.ஐ.டி. போலீசாரை கொண்டு விசாரனை நடத்தி உண்மை குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
மேலும் ஒருவர் கைது
இதை தொடர்ந்து உயர்நீதிமன்ற மதுரை கிளை இந்த வழக்கை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மதுரை சி.பி.சி.ஐ.டி. துணை போலீஸ் சூப்பிரண்டு பெலிக்ஸ் சுரேஷ் பீட்டருக்கு உத்தரவிட்டது. அவருடைய தலைமையில் சிவகங்கை மாவட்ட சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் கீதா, சப்-இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்ராஜன், ஏட்டுக்கள் முத்துக்குமார், திருநாவுக்கரசு, ஜெயக்குமார் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி, இந்த வழக்கில் முதல் கட்டமாகஇந்திய கம்யூனிஸ்டு கட்சியின் கல்லல் ஒன்றிய செயலாளர் குணாளன்(45) மற்றும் தேவகோட்டையை சேர்ந்த பாலாஜி (47) ஆகிய 2 பேரை ஏற்கனவே கைது செய்தனர்.
இந்நிலையில் நேற்று இந்த வழக்கில் கீழப்பூங்குடியை சேர்ந்த தேவேந்திரன் (47) என்பவர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரனை நடைபெற்று வருகிறது.