பர்கூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய 3 பேர் கைது
பர்கூர்:
பர்கூர் அருகே பட்டப்பகலில் வீடு புகுந்து திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
நர்சு வீட்டில் திருட்டு
பர்கூர் அருகே உள்ள அம்மேரி மேம்பாலம் அருகே குடியிருப்பு ஒன்றில் மேல் மாடியில் கர்நாடக மாநிலம் கே.ஜி.எப். பகுதியை சேர்ந்த வேதகிரி (வயது 36) என்பவரும், இவருடைய மனைவி நிஜா ஸ்ரீ (30) என்பவரும் வசித்து வருகின்றனர். வேதகிரி தனியார் கிரஷரில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி நிஜா ஸ்ரீ பர்கூர் அரசு ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் கடந்த மே மாதம் 12-ந் தேதி வேலைக்கு சென்று விட்டனர். அதன்பிறகு பட்டப்பகலில் அவர்களின் வீட்டின் கதவை உடைத்து பீரோவிற்குள் இருந்த தங்கச் சங்கிலி, மோதிரம், வளையல் என 14 பவுன் நகைகளை மர்ம மனிதர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
துணை போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின் பேரில், இன்ஸ்பெக்டர் சவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மும்தாஜ் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் மர்ம நபர்களை பல்வேறு கோணங்களில் விசாரித்து வந்தனர். இந்த நிலையில், காரகுப்பம் செல்லும் மேம்பாலம் அருகே போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார்கள்.
3 பேர் கைது
அவர்களிடம் தீவிரமாக விசாரித்த போது அந்த பகுதியில் பூட்டி இருந்த வேதகிரியின் வீட்டில் நகைகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். அவர்கள் ஈரோடு மாவட்டம், பவானி தாலுகா, வடக்கு தெரு மருத்துவமனை ரோட்டில் உள்ள சக்திவேலின் மகன் நடேஷ் குமார் (39), பெங்களூரு திலக் நகர் பி.டி.வி. லே அவுட் 30-வது கிராஸ் பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் திலீப் குமார் (35), மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் தாலுகா, துரைஸ் நகரை சேர்ந்த பெருமாள் மகன் தினேஷ்குமார் (30) ஆகியோர் என தெரிய வந்தது.
அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த நகைகளையும் மீட்டனர். மேலும் மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.