லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்கள் கைது
பல்லடம் அருகே அதிக வெளிச்சத்துடன் கார் ஓட்டி வந்ததை தட்டிக்கேட்ட லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பல்லடம் அருகே அதிக வெளிச்சத்துடன் கார் ஓட்டி வந்ததை தட்டிக்கேட்ட லாரி டிரைவரை துப்பாக்கியை காட்டி மிரட்டிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
லாரி டிரைவர்
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் கென்சன் ராஜ் (வயது 38). லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் தூத்துக்குடியில் இருந்து லாரியில் பாரம் ஏற்றிக்கொண்டு கோவை நோக்கி வந்து கொண்டிருந்தார். நேற்று அதிகாலை பல்லடம்-தாராபுரம் மெயின் ரோட்டில் பனப்பாளையம் அருகே வந்தபோது எதிரே வந்த காரின் முன்புற விளக்கு அதிக வெளிச்சத்துடன் இருந்தது.
மேலும் அந்த கார் அருகில் வந்த போதும் வெளிச்சத்தை குறைக்கவில்லை என கூறப்படுகிறது. இது லாரி டிரைவருக்கு சிரமத்தை ஏற்படுத்தியது. இதனால் காரை நிறுத்தும்படி கூறிய அவர், காரை ஓட்டி வந்த வாலிபர்களிடம் ஏன் இப்படி அதிக வெளிச்சத்துடன் விளக்குகளை போட்டு வருகிறீர்கள். எதிரே வருபவர்கள் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. இதனால் விபத்துகள் ஏற்பட்டு விடுமே என்று சத்தம் போட்டுள்ளார்.
துப்பாக்கியை காட்டி மிரட்டல்
இதனால் லாரி டிரைவருக்கும், காரில் வந்த வாலிபர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் லாரி டிரைவர் மீண்டும் லாரியை கோவை நோக்கி ஓட்டிச்சென்றார். பல்லடம் பஸ் நிலையம் அருகே வந்தபோது, மீண்டும் அந்த கார் லாரியின் குறுக்காக வந்து நின்றது. அதில் இருந்து இறங்கிய 2 வாலிபர்கள் துப்பாக்கியைக் காட்டி கொன்று விடுவேன் என லாரி டிரைவரை மிரட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி டிரைவர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் டிரைவரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த கார் குறித்து தாராபுரம் ரோட்டில் உள்ள சோதனைச் சாவடிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சோதனை சாவடியில் அந்த கார் சிக்கியது. அங்கு காரில் வந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
2 பேர் ைகது
இதில் அவர்கள் காரைக்குடியைச் சேர்ந்த செந்தில்நாதன் என்பவரது மகன் அபிஷேக்குமார் (21) என்பதும், கோவையில் தங்கி வேலை பார்ப்பதும், காரைக்குடியில் நடைபெறும் கோவில் விசேஷத்திற்காக தனது காரில் உடன் பணி புரியும் கோவையைச் சேர்ந்த பரணிதரன் (22) என்பவரை அழைத்து சென்றதும் தெரியவந்தது. அத்துடன் அந்த துப்பாக்கி, பறவைகளை வேட்டையாட பயன்படும் ஏர்கன் எனப்படும் துப்பாக்கி என்பதும் தெரியவந்தது. எனவே 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.