கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் மணல், ஜல்லி கற்கள் கடத்திய 14 லாரிகள் பறிமுதல் 6 டிரைவர்கள் கைது
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி மணல், ஜல்லிகற்கள் கடத்திய 14 லாரிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வாகன சோதனை
தேன்கனிக்கோட்டை தாலுகா கக்கதாசம் வருவாய் ஆய்வாளர் சரவணன் மற்றும் அலுவலர்கள் அன்னியாளம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரிகளை நிறுத்தி அலுவலர்கள் சோதனை செய்தனர். அதில் ஜல்லிகற்கள், எம்.சாண்ட் மணல் அனுமதியின்றி கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிரைவர்கள் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி சீனிவாஸ் (வயது33), தேன்கனிக்கோட்டை திம்மனட்டி சக்திவேல் (24), கோணசந்திரம் வெங்கட்ராஜ் (34), அஞ்செட்டி செல்வமணி (26) அத்திப்பள்ளி மந்துகுமார் யாதவ் (23), சுசீல்சிங் (26) ஆகிய 6 பேரை அலுவலர்கள் கைது செய்தனர். மணல், ஜல்லிகற்களுடன் 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
8 லாரிகள்
இதேபோல குருபரப்பள்ளி, அட்கோ, பாகலூர், கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தாசில்தார் சம்பத், சிறப்பு தாசில்தார் மகேந்திரன், வருவாய் ஆய்வாளர் சுகுமார், கிராம நிர்வாக அலுவலர்கள் மாதேஷ், ராஜேஸ் மற்றும் அலுவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எம்.சாண்ட் மணல், ஜல்லிகற்கள், தடுப்பு கற்கள் கடத்திய 8 லாரிகளை அலுவலர்கள் பறிமுதல் செய்து, போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.