சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் கெடமலையில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நாமக்கல் மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் போலீசார் கடந்த 1-ந் தேதி கெடமலையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அங்கு சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது கண்டறியப்பட்டது. இது தொடர்பாக கெடமலையை சேர்ந்த வெள்ளையன் (வயது53) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 லிட்டர் சாராயம் மற்றும் 300 லிட்டர் சாராய ஊறலை கைப்பற்றி அழித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுவதற்கு பயன்படுத்திய உபகரணங்களையும் அழித்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட வெள்ளையன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டார். சாராய வியாபாரியான இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன், மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அவரது பரிந்துரையை ஏற்று கலெக்டர் உமா, சாராய வியாபாரி வெள்ளையனை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டு உள்ளார்.