அரூர் அருகே போலி டாக்டர் கைது: மருந்து, மாத்திரைகள் பறிமுதல்


அரூர் அருகே போலி டாக்டர் கைது: மருந்து, மாத்திரைகள் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Jun 2023 7:00 PM GMT (Updated: 30 Jun 2023 7:59 AM GMT)
தர்மபுரி

அரூர் அருகே பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்த போலி டாக்டரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் வைத்திருந்த மருந்து, மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

போலி டாக்டர்

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மருத்துவம் படிக்காமல் ஒருவர் கிளினிக் நடத்தி பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவம் பார்ப்பதாக மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அரூர் அரசு ஆஸ்பத்திரியின் மருத்துவ அலுவலர் டாக்டர் அருண் பிரகாஷ் மற்றும் குழுவினர் எச்.ஈச்சம்பாடி கிராமத்தில் உள்ள வணிக வளாகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு சந்திரசேகரன் (வயது 42) என்பவர் பொதுமக்களுக்கு அலோபதி மருத்துவ சிகிச்சைகள் அளிப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக டாக்டர்கள் அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் எந்தவித உரிமமும் பெறாமலும், தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் பதிவு இல்லாமலும் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் 10-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த போலி டாக்டர் என்பதும் உறுதியானது.

கைது

கடந்த சில ஆண்டுகளாக சந்திரசேகரன் அந்த பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடர்பாக மருத்துவ அலுவலர் அருண் பிரகாஷ் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலி டாக்டர் சந்திரசேகரனை கைது செய்தனர். அவர் மருத்துவ சிகிச்சை அளிக்க பயன்படுத்திய ஊசி மருந்துகள், மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அரூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story