பஸ்சில் துப்பாக்கிகளுடன் வந்த 4 பேர் கைது


பஸ்சில் துப்பாக்கிகளுடன் வந்த 4 பேர் கைது
x
தினத்தந்தி 24 Sept 2023 2:00 AM IST (Updated: 24 Sept 2023 2:00 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் பஸ்சில் துப்பாக்கிகளுடன் வந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடம் இருந்து 5 துப்பாக்கிகள் மற்றும் 25 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

விருத்தாசலம்:

கடலூா் மாவட்ட டெல்டா பிரிவு போலீசார் நேற்று விருத்தாசலம் புறவழிச்சாலையில் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது அவ்வழியாக வந்த பஸ் ஒன்றில் சோதனை செய்த போது, அதில் சந்தேகத்திற்கிடமான வகையில் 4 பேர் இருந்தனர்.

உடனே போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் 5 துப்பாக்கிகள் மற்றும் 25 தோட்டாக்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவற்றை கைப்பற்றிய போலீசார், அந்த 4 பேரையும் விருத்தாசலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

குற்ற சம்பவங்களில் ஈடுபட...

விசாரணையில் அவர்கள், திண்டுக்கல் மாவட்டம் நாகல்நகர் அடுத்த வேடப்பட்டியை சேர்ந்த வேல்ஸ்குமார் மகன் அன்பரசன்(வயது 27), தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அடுத்த மணலூரை சேர்ந்த செந்தில்குமார்(24), ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த கண்ணாரபட்டி பகுதியை சேர்ந்த பூமிநாதன் மகன் அழகேஸ்வரன்(24) உள்பட 4 பேர் என்பது தெரியவந்தது.

தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த 8-ந் தேதி விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. தியாகராஜன் மகன் இளையராஜாவை(45) துப்பாக்கியால் சுட்ட ஆடலரசு, துப்பாக்கி வாங்கிய பீகாரை சேர்ந்த சோட்டாவிடம், அன்பரசன் உள்ளிட்ட 4 பேரும் துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்கள் வாங்கியதும், 4 பேர் மீதும் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

4 பேர் கைது

இதையடுத்து விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசன் உள்ளிட்ட 4 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 5 துப்பாக்கிகள் மற்றும் 25 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. துப்பாக்கி விற்பனை செய்த சோட்டாவை பிடிப்பதற்காக, தனிப்படை போலீசார் பீகார் சென்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story