பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை வாலிபர் கைது
பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட சென்னை வாலிபர் கைது செய்யப்பட்டார்.
செல்போன் சிக்னல்
திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர் உத்தரவின்பேரில் திருவெறும்பூர் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரவுடிகளை, துணை சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில் சென்னை எண்ணூர் காட்டூர் போலீஸ் நிலையத்தில் உள்ள பல கொலை வழக்குகளில் தொடர்புடைய தனசேகரனின் கூட்டாளியான மவுலிதரன் என்ற பாடியப்பா(வயது 23) என்பவர், கொலை வழக்கு தொடர்பாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார்.இதைத்தொடர்ந்து சென்னை எண்ணூர் கோர்ட்டு, பாடியப்பாவிற்கு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளது. அதன்பேரில் சென்னை போலீசார் பாடியப்பாவை தேடி வந்தனர். இந்நிலையில் பாடியப்பாவின் செல்போன் சிக்னலை வைத்து சென்னை காட்டூர் போலீசார் விசாரணை நடத்தியபோது, திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கோகுல் நகர் பகுதியில் பாடியப்பா பதுங்கி இருந்தது தெரியவந்தது.
கைது
அதன் அடிப்படையில் அங்கு வந்த சென்னை காட்டூர் போலீசார், திருவெறும்பூர் போலீசார் உதவியுடன் பாடியப்பாவை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். இதையடுத்து அவரை சென்னை அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் நேற்று துணை சூப்பிரண்டு அறிவழகன் தலைமையில் திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார், பாடியப்பா தங்கி இருந்த வீட்டில் அதிரடியாக சோதனை செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.