ஆய்வுக் குழுவுக்கு எதிராக போராடிய பரந்தூர் கிராம மக்கள் கைது - டிடிவி தினகரன் கண்டனம்


ஆய்வுக் குழுவுக்கு எதிராக போராடிய பரந்தூர் கிராம மக்கள் கைது - டிடிவி தினகரன் கண்டனம்
x

பரந்தூர் கிராம மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமானநிலையம் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் ஆய்விற்காக ஏற்படுத்தப்பட்ட குழு, முன்பே திட்டமிடப்பட்ட முடிவுகளை மனதில் வைத்துக்கொண்டு, பெயரளவுக்கு ஓர் ஆய்வை மேற்கொள்ளவுள்ளதாக வந்த செய்தியை அறிந்து, அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜனநாயகமுறையில் போராடிய கிராம மக்கள் கைது செய்யப்பட்டதை வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

பரந்தூர் விமான நிலைய பகுதியில் உள்ள நீர்நிலைகளின் பாதுகாப்பு குறித்தும், அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்தும் ஆராய அரசால் தேர்வு செய்யப்பட்ட நிறுவனம் முறையான வகையில் ஆய்வை மேற்கொள்ளாமல் ஒப்புக்கு ஆய்வை நடத்தவுள்ளதாக வந்த செய்தியை அறிந்து, பரந்தூரில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்கள் பரந்தூர்-ஸ்ரீபெரும்புதூர் இடையே ஊர்வலமாக செல்ல முயன்றபோது போலீசார் அவர்களை பலவந்தமாகத் தடுத்து நிறுத்தி கைது செய்துள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது விவசாயிகளின் காவலராக காட்டிக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் புதிய விமானநிலைய திட்டத்தை செயல்படுத்த ஒற்றை காலில் நிற்பதும், இத்தனை நாட்களாக போராடிவரும் மக்களை உதாசீனப்படுத்துவதும், விமான நிலையத்திற்கு மாற்று வழிகளைப் பற்றி சிந்திக்க மறுப்பதும் ஏன் என அந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஆகவே, பரந்தூர் மக்களும் தமிழ்நாட்டு மக்கள் தான், வேற்று கிரக வாசிகள் அல்ல என்பதை முதலமைச்சர் உணர்ந்து அவர்களது போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருவதோடு, ஜனநாயக முறையில் போராடியவர்களை எந்தவித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுவித்திட உத்தரவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.



Next Story