விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது
விசாரணைக்கு கோர்ட்டில் ஆஜராகாதவர் கைது செய்யப்பட்டார்.
பெரம்பலூர் மாவட்டம், லாடபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன்(வயது 38). இவரை, ஒரு கற்பழிப்பு வழக்கில் குற்றவாளி என்று கடந்த 2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பெரம்பலூர் மாவட்ட முதன்மை கோர்ட்டு தீர்ப்பளித்து, அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதைத்தொடர்ந்து பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார், திருச்சி மத்திய சிறையில் மகேஸ்வரனை அடைத்தனர்.
பின்னர் மகேஸ்வரன் தரப்பில் இந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மேல் முறையீடு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் ஜாமீனில் வெளியே வந்தார். அந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.
தற்போது வழக்கு விசாரணைக்கு சரிவர கோர்ட்டில் ஆஜராகாத காரணத்தால் சென்னை உயர்நீதிமன்றத்தால் மகேஸ்வரனுக்கு வாரண்டு பிறப்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மகேஸ்வரனை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா நேற்று கைது செய்தார். இன்று (திங்கட்கிழமை) அவரை போலீசார் சென்னை ஐகோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளனர்.