சாட்சியம் அளிக்க ஆஜராகாத சிறுகனூர் சப்-இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு
சாட்சியம் அளிக்க ஆஜராகாத சிறுகனூர் சப்-இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து பெரம்பலூர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெரம்பலூர் மாவட்டம், ஆலம்பாடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 44). டிரைவரான இவர் சென்னை கொரட்டூர் பாரதி நகரில் தங்கியிருந்து, அதே பகுதியை சேர்ந்த முருகேசனின் மனைவி ராணி என்பவருக்கு சொந்தமான சரக்கு வாகனத்தை கடந்த 2016-ம் ஆண்டு ஓட்டி வந்தார். கடந்த 6-4-2016 அன்று சிவக்குமார் சென்னையில் இருந்து திருச்சிக்கு வீட்டு சாமான்களை சரக்கு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு திருச்சி நோக்கி சென்று கொண்டிருந்தார். சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையம் அருகே மதியம் சென்றபோது, அந்த வழியாக வந்த பதிவு எண் தெரியாத லாரி ஒன்று திடீரென திரும்பியதால் சிவக்குமார் ஓட்டி சென்ற சரக்கு வாகனம் நிலைத்தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த சிவக்குமார் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த விபத்து தொடர்பாக சரக்கு வாகனத்தின் உரிமையாளர் ராணி சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் சம்பந்தப்பட்ட லாரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக சரக்கு வாகன டிரைவர் சிவக்குமார் பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சிறுகனூர் போலீஸ் நிலையத்தில் அப்போது பணியில் இருந்து சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு கடந்த 31-3-2022 அன்றும், 23-6-2022 அன்றும் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அந்த நாட்களில் சாட்சியம் அளிக்க நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நேற்றும் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நேற்றும் அந்த சப்-இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனால் அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டருக்கு பிணையில் விடுவிக்கக்கூடிய பிடிவாரண்டை பெரம்பலூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மூர்த்தி பிறப்பித்து உத்தரவிட்டார். மேலும் அந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 4-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி தெரிவித்தார்.