திருப்பூரில் பரபரப்பு முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்ற கணினி மைய உரிமையாளர் கைது சேலம் ரெயில்வே போலீசார் நடவடிக்கை
திருப்பூரில் பரபரப்பு முறைகேடாக ரெயில் டிக்கெட் விற்ற கணினி மைய உரிமையாளர் கைது சேலம் ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
சூரமங்கலம்
திருப்பூரில் முறைகேடாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்ற கணினி மைய உரிமையாளரை சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.
கணினி மையம்
திருப்பூர் அருகே உள்ள அனுப்பர்பாளையம் திலகர் நகர் பஸ் நிலையம் பகுதியில் ஒரு கணினி மையத்தில் (கம்ப்யூட்டர் சென்டர்) முறைகேடாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை நடப்பதாக சேலம் ரெயில்வே பாதுகாப்பு படை குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த மையத்துக்கு சென்று திடீரென சோதனையிட்டனர்.
சோதனையில் அந்த மையத்தின் உரிமையாளரான திலகர் நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (வயது 33) முறைகேடாக டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு ரெயில் டிக்கெட்டுகளை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவரிடமிருந்து பல்வேறு பெயர்களில் பல ரெயில்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்யப்பட்ட ரூ.26 ஆயிரத்து 351 மதிப்பிலான 22 டிக்கெட்டுகளும், ரூ.15 ஆயிரத்து 165 மதிப்பிலான பயணம் முடிந்த 9 டிக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது
இந்த டிக்கெட்டுகளை எடுக்க பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் முறைகேடாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்பனை செய்ததாக கணினி மைய உரிமையாளர் சுரேஷ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முறைகேடாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து விற்ற கணினி மைய உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.